< Back
மாநில செய்திகள்
முதுகுளத்தூரில் வெறிநாய்கள் கடித்து 12 ஆடுகள் சாவு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

முதுகுளத்தூரில் வெறிநாய்கள் கடித்து 12 ஆடுகள் சாவு

தினத்தந்தி
|
29 Jan 2023 12:15 AM IST

முதுகுளத்தூரில் வெறிநாய்கள் கடித்து 12 ஆடுகள் இறந்தன.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் வெறிநாய்கள் கடித்து 12 ஆடுகள் இறந்தன.

12 ஆடுகள் சாவு

முதுகுளத்தூர் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி. விவசாயியான இவர் வெள்ளையாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான ஆடுகள் அதே பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வெறி நாய்கள் சில ஆக்ரோஷமாக சென்று கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்து குதறின. இதனால் ஆடுகள் நாலாபுறமும் சிதறி ஓடின. ஆடுகளின் சத்தம் கேட்டு பால்ச்சாமி அங்கு ஓடி வந்து நாய்களை விரட்டியடித்தார். இருப்பினும் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.

இதுகுறித்து பால்சாமி கூறுகையில், முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் கடைத்தெரு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.

நிவாரணம்

மேலும் அவைகள் பொதுமக்களையும், குழந்தைகளையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது. வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதே போல் இருசக்கர வாகனங்களின் குறுக்கே நாய்கள் பாய்வதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. மேலும் நான் கடன் வாங்கி ஆடுகளை வளர்த்து வருகிறேன்.

இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும். வெறி நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்