< Back
மாநில செய்திகள்
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலக்கு மிகவும் முக்கியம்-முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
நீலகிரி
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலக்கு மிகவும் முக்கியம்-முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு

தினத்தந்தி
|
22 Sept 2023 5:00 AM IST

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலக்கு மிகவும் முக்கியம் என்று ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேசினார்.

ஊட்டி

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலக்கு மிகவும் முக்கியம் என்று ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேசினார்.

தமிழ் கனவு பண்பாட்டு நிகழ்ச்சி

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவ- மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று நடந்த தமிழ் கனவு பண்பாட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மனிதர்களுக்கு சுய கவுரவம் மிக முக்கியம். இலவசமாக வரும் எதையும் பெண்கள் வாங்க கூடாது. அப்படி வாங்கினால் அதற்கு பின்னால் பேராபத்து இருக்கும்.

இலக்கு மிகவும் முக்கியம்

பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கொள்கை மற்றும் இலக்கு மிகவும் முக்கியம். மாணவர்களுக்கு தற்போது நேரம் உள்ளது. அதை சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

தமிழகத்தில் நாம் விரும்பும் படிப்பு படிக்கலாம். ஆர்வமுள்ள தொழிலை செய்யலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இந்த உலகில் வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம், விழித்து கொள்ளாவிட்டால் வெற்றி பெறுவது மிகவும் சிரமம். கல்வி மிகப்பெரிய ஆயுதம் ஆகும்.

சிந்தனைத் திறன்

இதேபோல் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் சிந்தனை திறன் மிகவும் முக்கியம் ஆகும். பெண்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சிந்திக்கும் திறனை பயன்படுத்தி மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா, பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் முன்னேறி உள்ளதாக பெருமையுடன் கூறப்படுகிறது. ஆனால் உலகில் உள்ள 195 நாடுகளில் தனிநபர் வருமானத்தில் 164-வது இடத்தில் உள்ளது. இந்தியாவைவிட சீனாவின் தனிநபர் வருமானம் 4 மடங்கு அதிகம் ஆகும். அந்த நிலைக்கு நமது நாடும் வரவேண்டும். மாணவ- மாணவிகள் சினிமா மோகத்தை கைவிட்டு கல்வித் தேடல் பழக்கத்தை அதிகரித்து கொள்வதோடு அதனை கற்பிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற அதிகாலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். தினமும் 1 மணி நேரம்செய்தித்தாள் படியுங்கள். வாசிப்பு பழக்கம் வாழ்க்கையில் பெரும் வெற்றியை தரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கலெக்டர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்