< Back
மாநில செய்திகள்
தக்கலை அருகே அங்கன்வாடி மையத்துக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தக்கலை அருகே அங்கன்வாடி மையத்துக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது

தினத்தந்தி
|
14 Feb 2023 3:07 AM IST

தக்கலை அருகே அங்கன்வாடி மையத்துக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. இதனால் மையத்துக்கு வந்த குழந்தைகள் 2 மணி நேரம் காத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தக்கலை:

தக்கலை அருகே அங்கன்வாடி மையத்துக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. இதனால் மையத்துக்கு வந்த குழந்தைகள் 2 மணி நேரம் காத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

அங்கன்வாடி மையம்

தக்கலை அருகே உள்ள திக்கணங்கோட்டில் அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடியின் அருகில் குடியிருப்புகள் உள்ளன. இதில் அங்கன்வாடி மையத்தின் முன்புற வீட்டின் வலதுபுறத்தில் உள்ள சிறிய பாதை வழியாக தான் அங்கன்வாடி மையத்துக்கு வர வேண்டும்.

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பாதை சிமெண்ட் கட்டைகளை கொண்டும், கருங்கற்களை கொட்டியும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று காலையில் அங்கன்வாடி மையத்துக்கு வந்த பொறுப்பாளரும், பெற்றோருடன் வந்த குழந்தைகளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரி வருகை

உடனே சம்பவ இடத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆறுமுகநயினார் வந்து விசாரணை நடத்தினார். அப்போது முன்புற வீட்டில் வசிக்கும் பெண் பாதையை அடைத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் ஏன் பாதையை அடைத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு இந்த பாதை எனக்கு சொந்தமானது. ஆகவே தான் அடைத்துள்ளேன் என அந்த பெண் கூறினார்.

அதைத்தொடர்ந்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த சப் -இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் விசாரணை நடத்தினார். அப்போது எனக்கு சொந்தமான இடத்தை அரசு அபகரிக்க பார்க்்கிறது. ஆகவே தான் அடைத்துள்ளேன் என அந்த பெண் கூறினார்.

அதற்கு போலீஸ் தரப்பில் குழந்தைகள் சென்று வரும் பாதையை இப்படி திடீரென அடைக்கக்கூடாது. உங்களுக்கான இடம் என்றால் அதை முறையாக அரசு அதிகாரிகளை அணுகி தீர்வுகாண வேண்டும் ஆகவே பாதையை திறந்துவிடுமாறு கூறினார்.

2 மணி நேரம்

அதைத்தொடர்ந்து அடைத்து வைத்திருந்த பாதை திறக்கப்பட்டது. அதன்பிறகு அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகள் சென்றனர்.

இந்த சம்பவத்தினால் சுமார் 2 மணி நேரம் பெற்றோர்களுடன் வந்த குழந்தைகள் காத்து இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்