எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம் - சீமான் பேச்சு
|எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம் என்று ஈரோட்டில் சீமான் கூறினார்.
தீவிர பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா, மரப்பாலம், மண்டபம் வீதி, மகாஜன பள்ளிக்கூடம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
அதைத்தொடர்ந்து மகாஜன பள்ளிக்கூடம் அருகில் நடந்த பொதுக்கூடத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் தமிழர்
வாக்கு என்பது மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நாட்டில் வாழுகின்ற குடிமக்களின் கடைசி கருவி. ஒரு வலிமை மிக்க ஆயுதம். அநீதிக்கு எதிராக அந்த ஆயுதத்தை பயன்படுத்துபவன் எவனோ அவனே ஆகச்சிறந்த குடிமகனாக இருக்க முடியும். நீங்கள் சாதி, மதங்களாக பிரிந்து நின்றால் அச்சுறுத்தப்படுவீர்கள். ஆனால் ஒரே இனமாக இணைந்து நின்றால் பாதுகாப்பாக வாழ்வீர்கள்.
மார்க்கம், மதம் எல்லாம் மாறக்கூடியது. ஆனால் மொழியும், இனமும் ஒரு மனிதன் பிறப்பில் இருந்து, இறக்கும் வரை மாறிக்கொள்ளாதது. இனம் தான் நம் அடையாளம். உலகத்திற்கு எங்கு சென்றாலும், நாம் கிறிஸ்தவர்கள் என்றும், இஸ்லாமியர்கள் என்றும் அறிமுகப்படுத்த கூடாது. நாம் தமிழர் என்று அறிமுகப்படுத்த வேண்டும்.
கரும்பு விவசாயி
அன்பை கொடுத்தவனுக்கு அன்பை கொடு. துன்பத்தை கொடுத்தனுக்கு துன்பத்தை கொடுத்துவிட வேண்டும். வலியை கொடுத்தவனுக்கு அந்த வலியின் அருமையை உணர்த்திவிட வேண்டும். இந்த தேர்தலை நாங்கள் ஒரு மாறுதலாக பார்க்கிறோம். எங்கள் பின்னால் ஒன்றும் இல்லை. எங்களுடைய பின்புலம் எங்களுடைய மொழி. என் இனத்தின் நீண்ட நெடிய வரலாறு. அதுதான் எனக்கு பின்புலம்.
ஒரு முறை எங்களை ஆட்சியில் அமர வைத்து பாருங்கள். என் தாய் தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம். பாலியல் தொந்தரவு, சங்கிலி பறிப்பு, கொள்ளை எதுவும் இருக்காது. உங்களை நம்பி நிற்கிற பிள்ளைகளை கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் அனைவரும் நமது வேட்பாளர் மேனகாவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களித்து மேனகாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு சீமான் கூறினார்.