செல்போன் திருட்டு: வாலிபரை ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண்கள்...பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்
|பெண்களிடம் செல்போன் திருடிய வாலிபரை ஆசைக்கு இணங்குவதாக அழைத்து அடித்து உதைத்தனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தென்மாவட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் ஏகனாம்பேட்டை கிராமத்திற்கு புதிதாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். அவர்கள் புதிதாக குடிவந்துள்ள வீட்டில் மின்விசிறி இல்லாததால் மொட்டை மாடியில் இரவில் தூங்குவதை, வழக்கமாக கொண்டிருந்தனர்.இதை நோட்டமிட்ட நபர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு மாடியில் பெண்கள் தூங்கி கொண்டிருந்தபோது அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய 3 விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்று விட்டார்.
இதை தொடர்ந்து வீட்டின் அருகே இருந்த டீக்கடைக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் தங்களது செல்போனகள் திருட்டு போனது குறித்து அவர்கள் தெரிவித்தனர்.அங்கு இருந்தவர் தனது செல்போனை கொடுத்து அவர்களின் செல்போன் எண்ணுக்கு முயற்சி செய்து பார்க்கும்படி தெரிவித்தார்.பெண்களும் அவர்கள் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது மறுமுனையில் செல்போனை எடுத்த சுதாகர் அந்த பெண்களிடம் கொஞ்சி கொஞ்சி பேச தொடங்கினார்.
பெண்களும் தங்கள் வீட்டில் இருப்பவர்கள் போன் மூலம்தான் தொடர்பு கொள்வார்கள். நாங்கள் போனை எடுக்கவில்லை என்றால் வீட்டில் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று கூறியும் சுதாகர் அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தும் வண்ணம் பேசியுள்ளார்.இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் சுதாகரின் ஆசை வழியிலேயே சென்று மடக்கி பிடிக்குமாறு பெண்களுக்கு அறிவுரை வழங்கி தைரியம் தெரிவித்தனர்.
இதையடுத்து பெண்கள் சுதாகர் பேசுவதற்கு ஏற்ப நைசாக பேசி, சுதாகர் சொல்வதற்கெல்லாம் இணக்கமாக செல்வதாக பெண்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சுதாகரின் ஆசைக்கு இணங்குவது போல குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்தனர்.
இளம் பெண்களும் நைசாக பேசியதால் சுதாகர் பெண்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது அங்கு மறைந்திருந்த வாலிபர்கள் சுதாகரை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது சுதாகர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அங்கு இருந்த பொதுமக்கள், சுதாகரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த சுதாகரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அந்த நபர் செங்கல்பட்டு, மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 35) என்பது தெரியவந்தது. வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்தார். அவர் இது வரை 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக தெரிகிறது. திருட்டுகளில் ஈடுபட்டு அதன் மூலம் வரும் பணத்தில் ஜாலியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சுதாகர் மீது செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தற்போது சுதாகர் காஞ்சீபுரம் நாகலத்து மேடு பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டில் வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. போலீசார் சுதாகர் மீது ஆபாசமாக பேசுதல், திருட்டு, மிரட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.