கள்ளக்குறிச்சி
பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் - மாவட்ட முதன்மை நீதிபதி
|பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேசபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில் மாவட்ட சமூகநலத்துறை சார்பில் பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கினார். கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா வரவேற்றார்.
கருத்தரங்கில் நீதிபதி பேசியதாவது:- பெண்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பெண்களை பாதுகாக்கும் சட்டங்களான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் 2012 ஆகிய சட்டங்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக வரதட்சணை கேட்பது, கொடுப்பது மற்றும் வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
பாலியல் பிரச்சினைகள்
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சினைகளான தொடுதல் அல்லது தொட முயற்சித்தல், இதர பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு புகார் நேரடியாகவும் வழங்கலாம். அல்லது பாதுகாப்பு புகார் பெட்டி மூலம் அளிக்கலாம். பெண்களுக்கு பாதுகாவலாகவும், பக்க பலமாகவும் இருப்பது கல்வியாகும். எனவே கல்வியை ஆர்வமுடன் விரும்பி கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக உண்மை நிலையை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள், பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள், தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக்ராஜ், கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவன நிர்வாக
இயக்குனர் சக்திகிரி, கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.முடிவில் கோட்டாட்சியர் பவித்ரா நன்றி கூறினார்.