< Back
மாநில செய்திகள்
பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நீலகிரி
மாநில செய்திகள்

பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
28 Sept 2023 12:30 AM IST

வீர தீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

ஊட்டி

வீர தீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

குழந்தை தொழிலாளர்

தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைகள் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீர, தீர செயல்புரிந்து வரும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் மாநில விருதை கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு வழங்கி வருகிறது.

இதன்படி ஆண்டுதோறும் மேற்கண்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த விருது பெற 13 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்,

விண்ணப்பிக்கலாம்

வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வீர செயல் புரிந்திருக்க வேண்டும்.

இதுபோன்ற தகுதிகள் உடைய பெண் குழந்தைகள் வருகிற அக்டோபர் 30-ந் தேதிக்குள் ஊட்டியில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு நேரில் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்