புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் தூக்கில் தொங்கினார்
|திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கணவரும் அதே அறையில் தற்கொலை செய்த சோகம் அரங்கேறியுள்ளது.
பெருங்களத்தூர்,
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 30). பி.காம் பட்டதாரியான இவர், படப்பை அடுத்த ஒரகடத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காயத்ரிக்கும் (23) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. பி.எஸ்சி. பட்டதாரியான காயத்ரி, செம்மஞ்சேரி அருகே சிறுசேரியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
கணவன், மனைவி இருவரும் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் புத்தர்தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஜோடியாக தற்கொலை
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்று இருந்த சரவணன் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்.
மனைவி தற்கொலை செய்து கொண்டதால் செய்வதறியாது தவித்த சரவணன் அதே அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வந்து பார்த்த போது, கணவன், மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நெடுமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன், மனைவி 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான கடிதம்
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரவணன், காயத்ரி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பு காயத்ரி கைப்பட எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ''எவ்வளவு பேசினாலும் புரிந்து கொள்ளவில்லை, பேசியும் பலனில்லை. இனி இவருடன் வாழ இயலாது'' என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
புதுமண தம்பதி தற்கொலை செய்த சம்பவம் பெருங்களத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.