< Back
மாநில செய்திகள்
பிறந்தநாள் கொண்டாட வந்த காதலன் வெட்டிக்கொலை ;  காதலி தற்கொலை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட வந்த காதலன் வெட்டிக்கொலை ; காதலி தற்கொலை

தினத்தந்தி
|
10 Jun 2023 1:19 PM IST

காதலன் கொலை செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த காதலி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போத்தனூர்,

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் செல்போனில் பேசியும், அடிக்கடி சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

காதலுக்கு பெற்றோர் சம்மதம்

இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. ஆரம்பத்தில் இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மகளின் வற்புறுத்தலால் பெற்றோர் சம்மதித்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோர் பிரசாந்தையும், அந்த பெண்ணையும் அழைத்து பேசினர். அப்போது, "உங்களின் காதலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கொஞ்ச நாட்கள் சென்ற பின்னர் உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம்" என்று அறிவுரை கூறினர்.

வாலிபர் வெட்டிக்கொலை

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அந்த பெண்ணிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது வீட்டிற்கு பிரசாந்த் சென்றார். நள்ளிரவு நேரம் என்பதால் காதலியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் குடிபோதையில் காதலியின் பெயரை சொல்லி, வெளியே வா பிறந்தநாள் கொண்டாடலாம் என்று கூச்சல் போட்டனர். ஆனால் யாரும் வெளியே வராததால் பிரசாந்த் உள்பட 4 பேரும் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். தொடர்ந்து வீட்டின் அலார மணியை அடித்துக்கொண்டே இருந்தனர்.

இதையடுத்து பெண்ணின் தந்தை மகாதேவன் மற்றும் தாய்மாமா விக்னேஷ் ஆகியோர் வெளியே வந்தனர். அவர்களிடம் தனது காதலியை பிறந்தநாள் கொண்டாட வெளியே வர சொல்லுமாறு குடிபோதையில் பிரசாந்த் தகராறு செய்தார். அதற்கு அவர்கள், இப்போது வேண்டாம் நாளை காலை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி பிரசாந்தை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் பிரசாந்தும், அவரது நண்பர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து, இளம்பெண்ணின் கண் முன்னே பிரசாந்தை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.

இளம்பெண் தற்கொலை

காதலன் கொலை செய்யப்பட்டதால் மன வேதனையில் இருந்த அந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் குணமடைந்த அந்த இளம்பெண் வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்