திருவள்ளூர்
கணவரை 2-வது திருமணம் செய்ததால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை; முதல் மனைவி உள்பட 3 பேர் கைது
|ஆர்.கே.பேட்டையில் கணவரை 2-வது திருமணம் செய்த ஆத்திரத்தில் இளம்பெண்ணை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்த முதல் மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமணம்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ராஜா நகரம் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் தேசம்மாள் (வயது 55). இவரது மகள் புஷ்பா (26). இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு சின்ன பாராஞ்சி கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவருடன் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவருடன் 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், புஷ்பா பின்னர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது தாயுடன் வசித்து வந்தார். அப்போது புஷ்பாவிற்கும் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மூரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் இருவரும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
முதல் மனைவியுடன் தகராறு
இவர்கள் ஆர்.கே.பேட்டையில் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். பெருமாளுக்கு ஏற்கனவே செம்பருத்தி (30) என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு தமிழரசன் (11) என்ற மகனும், யோகிதா (5) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் 2-வது மனைவி மீது இருந்த மோகத்தில் முதல் மனைவி வீட்டுக்கு பெருமாள் சரிவர செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் செம்பருத்திக்கும் பெருமாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெருமாளின் அக்காள் மகன் சிவா (23) என்பவர் செம்பருத்தி வீட்டில் வசித்து வந்த நிலையில், செம்பருத்தியின் ஆலோசனையின் பேரில் புஷ்பாவை ஒழித்து கட்ட முடிவு செய்ததாக தெரிகிறது.
கழுத்தை இறுக்கி கொலை
இதையடுத்து சிவா தனது நண்பன் ராஜசேகர் (21) என்பவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் ஆர்.கே.பேட்டையில் உள்ள புஷ்பா வீட்டிற்கு சென்றார். அங்கு புஷ்பா கழுத்தில் துணியை போட்டு இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டுக்கு வந்த பெருமாள் தனது 2-வது மனைவி புஷ்பா ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தேசம்மாள் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அப்போது ஆர்.கே.பேட்டையில் உள்ள பெருமாள் வீட்டிற்கு சிவா அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. உடனே சிவாவை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, புஷ்பாவை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது.
சிவா தனது நண்பன் ராஜசேகருடன் சேர்ந்து செம்பருத்தி அவரை கொலை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் சிவா, ராஜசேகர், செம்பருத்தி ஆகிய 3 பேரையும் கைது செய்து பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.