திருவள்ளூர்
பூண்டி அருகே கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதால் தீக்குளித்த சிறுமி சாவு - 6 மாதத்திற்கு பின் உயிரிழந்த பரிதாபம்
|பூண்டி அருகே கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதால் தீக்குளித்த சிறுமி 6 மாதத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பது வழக்கம். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுமி மாந்தோப்புக்கு மாடு மேய்க்க சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 5 வாலிபர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர். மேலும் இதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த அந்த சிறுமி சம்பவம் நடந்த மறுநாள் வீட்டில் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகாரின் பேரில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே உடல்நிலை ஓரளவு சீரானதால் அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு மீண்டும் உடல் நிலை திடீரென மோசம் அடைந்தது. அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.