திருவள்ளூர்
திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் சிறுமி மீட்பு
|திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் 11 வயது சிறுமியை ரெயில்வே போலீசார் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் அந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை கடைக்கு செல்வதாக கூறி ரெயிலில் அழைத்துச் சென்று திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
அந்த சிறுமி திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் நின்று அழுது கொண்டிருந்தார். அப்பொழுது அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது சிறுமி ஒருவர் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் சென்று விசாரித்தனர். அப்பொழுது அந்த சிறுமி தனது மாமா பாண்டியன் என்பவர் தன்னை ரெயிலில் அழைத்து வந்ததாகவும் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் சிறுமியை மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.