சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
|கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கோவை,
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்ற வெள்ளையன் (வயது 54). கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்த 9 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கித்தருவதாக கூறி, வீட்டுக்கு அழைத்துச்சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் 2017-ம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளி ஆசிரியையிடம் கூறியதை அடுத்து, குழந்தைகள் நல அமைப்புக்கு ஆசிரியை தகவல் தெரிவித்தார். பின்னர் குழந்தைகள் நல அமைப்பினர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்பேரில் தொழிலாளி செல்வராஜ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.