சென்னை: கல்லூரி மாணவி கொலை வழக்கு - சிபிசிஐடி-க்கு மாற்றம்
|சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரிமாணவி சத்திய பிரியா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரெயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஓடும் ரெயிலில் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை துரைப்பாக்கத்தில் வைத்து அவரை கைது செய்தனர். இதையைடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். சதீஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை வருகிற 28-ந் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஓடும் ரெயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை ரெயில்வே காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.