நாமக்கல்
பெண் கழுத்தை அறுத்து படுகொலை
|பரமத்திவேலூர் அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவர் படுகாயமடைந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
பரமத்தி வேலூர்
ஓய்வு பெற்ற காவலாளி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், குச்சிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 70). இவர் மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் (65).
இந்த தம்பதிக்கு கீதா, கோமதி, யமுனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சண்முகமும் அவரது மனைவி நல்லம்மாளும் குச்சிக்காடு தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர். அடுத்த மாதம் கீதாவின் மகள் சிவானிக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதனால் திருமண ஏற்பாடுகளை சண்முகத்தின் குடும்பத்தினர் செய்து வந்தனர்.
பெண் படுகொலை
கடந்த 10-ந் தேதி இரவு சண்முகத்தின் வீட்டிற்கு முன்பும், பாதையிலும் மர்மநபர்கள் மிளகாய் பொடியை தூவி விட்டு, பின்புறம் இருந்த தண்ணீர் குழாயை உடைத்து விட்டு சென்றனர். இது குறித்து சண்முகம் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகத்தின் வீட்டிற்கு வந்த மர்மநபர்கள் வீட்டு முன்பு இருந்த மரத்தில் ஏறி மாடி படிக்கட்டு வழியாக உள்ளே சென்றனர். பின்னர் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லம்மாள், அவரது கணவர் சண்முகம் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு இரும்பு கம்பியால் அவர்களை தாக்கினர். தொடர்ந்து நல்லம்மாளை கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்த பூட்டை எடுத்து வெளிக்கதவை பூட்டி விட்டு சென்றுள்ளது.
ரத்த வெள்ளத்தில்...
நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டின் வெளியே உள்ள கதவு பூட்டி இருந்ததால் அவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் தம்பதியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக உறவினர்களுக்கும், வேலூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் நல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அங்கு உயிருக்கு போராடிய சண்முகத்தை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
5 தனிப்படைகள்
இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி ஆகியோர் வந்தனர். கொலை நடந்த இடத்தில் மர்மநபர்கள் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மர்மநபர்கள் பணம் மற்றும் நகைக்காக கொலை செய்துள்ளனரா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர் அருகே பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.