கோவில் விழாவில் இளம்பெண் வெட்டிக்கொலை
|கோவில் திருவிழாவில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கொட்டமடக்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 33). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சத்யா (25). அதே பகுதியை சேர்ந்தவர் முனீசுவரி (28). இவருடைய தம்பி சதீஷ் (20).
சத்யாவுக்கும், சதீசுக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும், இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சதீஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பொங்கல் திருவிழா
சதீஷ் தற்கொலைக்கு பின்னர் முனீசுவரி மற்றும் மணிமாறன் குடும்பங்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்த மணிமாறன், மனைவியின் ஊரான, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குடியேறினார்.
தற்போது கொட்டமடக்கிபட்டியில் உள்ள ஒரு கோவிலில் வைகாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு தனது தாயை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மணிமாறன் ஊருக்கு வந்தார். நள்ளிரவில் கோவிலுக்கு சென்றார்.
பெண் கொலை
இதை அறிந்த முனீசுவரி, தனது கணவர் குருசாமி, மைத்துனர் சுரேஷ் ஆகியோருடன் அங்கு சென்று மணிமாறனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிமாறன், அரிவாளால் முனீசுவரியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முனீசுவரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முனீசுவரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த தகராறில் காயம் அடைந்த குருசாமி, சுரேஷ் ஆகிய இருவரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரன்கோவில் பகுதியில் மணிமாறனை கைது செய்தனர்.