< Back
மாநில செய்திகள்
குளத்தில் குளித்த மாணவி மின்சாரம் தாக்கி சாவு
திருவாரூர்
மாநில செய்திகள்

குளத்தில் குளித்த மாணவி மின்சாரம் தாக்கி சாவு

தினத்தந்தி
|
26 Jun 2023 12:45 AM IST

திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டர் மோதி மின்கம்பம் முறிந்து குளத்தில் விழுந்தது. அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டர் மோதி மின்கம்பம் முறிந்து குளத்தில் விழுந்தது. அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

மின்கம்பத்தில் டிராக்டர் மோதியது

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

நேற்று திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த டிராக்டர் ஒன்று வேலையை முடித்துவிட்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், அருகில் இருந்த மின்கம்பம் மீது மோதியது.

மின்சாரம் தாக்கி சாவு

இதில் மின்கம்பம் முறிந்து அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. இதன் காரணமாக குளத்தில் மின்சாரம் பாய்ந்தது. அந்த நேரத்தில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த குன்னூர் நத்தம் தெருவை சேர்ந்த அர்ஜூனன் மகள் பிரகதீஸ்வரி(வயது18) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், ஆலிவலம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரகதீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து ஆலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கம்பம் மீது மோதிய டிராக்டர் யாருடையது? அதை ஓட்டி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற பிரகதீஸ்வரி, மன்னார்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்து உள்ளார். விரைவில் கல்லூரி செல்வதற்கு தயாராகி வந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி பலியானது, அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்