< Back
மாநில செய்திகள்
சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு:இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை
சேலம்
மாநில செய்திகள்

சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு:இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை

தினத்தந்தி
|
6 July 2023 1:37 AM IST

சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு:இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது

சேலம்

சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காய்கறிகள் விலை உயர்வு

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வெளி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.100-யை தாண்டி விற்கப்படுகிறது. உழவர் சந்தைகளில் நேற்று தக்காளி ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.98 வரையும், வெளி மார்க்கெட்டுகளில் ரூ.110 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் உழவர் சந்தைகளில் சின்னவெங்காயம் கிலோ ரூ.84-க்கும், கத்திரிக்காய் ரூ.46-க்கும், கேரட் ரூ.70-க்கும், பீட்ரூட் 60-க்கும், பாகற்காய் ரூ.50-க்கும், கொத்தமல்லி, புதினா ஆகியவை ஒரு கட்டு ரூ.30-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், பச்சை மிளகாய் ரூ.80-க்கும் விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் சின்னவெங்காயம் கிலோ ரூ.95 வரை விற்கப்பட்டது.

இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை

உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து இஞ்சி கொண்டு வரப்படுகிறது. தற்போது இஞ்சி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் உழவர் சந்தைகளில் கடந்த வாரம் ரூ.220-க்கு விற்கப்பட்ட இஞ்சி நேற்று ரூ.60 உயர்ந்து ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனையானது.

இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறும் போது, பருவ நிலை மாற்றம் காரணமாக தான் காய்கறிகள் விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக இஞ்சி வரத்து குறைந்துள்ளது. உழவர் சந்தைக்கு 500 கிலோ மட்டுமே இஞ்சி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரித்தால் தான் இஞ்சி மற்றும் காய்கறிகள் விலை குறையும் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்