1960-ல் வெளிநாட்டு இளவரசிக்கு தெய்வ விக்ரகம் அன்பளிப்பு - முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தகவல்
|தஞ்சையைச் சேர்ந்த தெய்வ விக்ரகம் வெளிநாட்டு இளவரசி ஒருவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி,
தர்மபுரியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தர்மபுரி மாவட்ட, உலக சிவனடியார்கள் திருக்கூட்ட முப்பெரும் விழா என்ற ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-
"கடந்த 1960ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் சேந்தங்குடி சிவன் ஆலயத்திலிருந்த உமா பரமேஸ்வரி அம்மன் தெய்வ விக்ரகம் வெளிநாட்டு இளவரசி ஒருவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து மனம் மிகுந்த வேதனையளிக்கிறது.
நமது கலை, கலாசாரம், பண்பாடு, ஆன்மீகம் உள்ளிட்டைவகளை அறிந்து, உணர்ந்து அந்த விக்ரகத்தை மீண்டும் நம்மிடமே ஒப்படைப்பார் என நம்புகிறோம். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, தெய்வ விக்ரகங்களைப் பரிசாகக் கொடுத்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.