நாமக்கல்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி:வெற்றிபெற்ற 1,780 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு
|நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, 1,780 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.41 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் வழங்கி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடைபெற்றது. கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் இருபாலருக்கும் நடந்தது. மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மேலும் நாமக்கல் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. அதேபோன்று விளையாட்டு துறையிலும் நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் தேசிய அளவில் சிறந்து விளங்கிடும் வகையில் வெற்றி பெற்று, மாவட்டத்திற்கு பெருமை தேடி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோகிலா உள்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.