< Back
மாநில செய்திகள்
புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லி பூ மஸ்கட்டுக்கு ஏற்றுமதி
மாநில செய்திகள்

புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லி பூ மஸ்கட்டுக்கு ஏற்றுமதி

தினத்தந்தி
|
21 Sept 2022 7:02 AM IST

மத்திய அரசின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லி பூ மஸ்கட் நகருக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது.

சென்னை:

'மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று கூறியவர் அறிஞர் அண்ணா. அத்தகைய பெருமை பெற்ற மல்லிகையில் மதுரை மல்லிக்கு என்று ஒரு தனி மவுசு உண்டு. அதாவது இந்த மல்லிகையானது மற்ற மல்லிகைப்பூக்களை விட அதிக வாசனை கொண்டது. எனவே, இந்த மதுரை மல்லிக்கு மயங்காத பெண்களே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த மதுரை மல்லியை பெண்கள் தலையில் வைக்கும் போது, அதனை வாசம் செய்யும் ஆண்கள் அந்த பெண்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள் என்றால் அதுவும் மிகையல்ல.

இத்தகைய சிறப்பு மிக்க மதுரை மல்லிகை பூவிற்கு நாம் ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்று உள்ளோம். இந்த நிலையில், இந்த மதுரை மல்லி பூ கடல் கடந்தும் வாசம் வீசும் வகையில் நேற்று மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியாக மதுரை மல்லி மற்றும் நிலக்கோட்டை, திண்டுக்கல், மதுரைக்கு அருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மலர்களான முல்லை, பிச்சிப்பூ, பட்டன் ரோஜா, சாமந்தி, மருக்கொழுந்து, துளசி, தாமரை, பன்னீர் ரோஜா, அல்லி ஆகியவை நேற்று (செப்டம்பர் 20) மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து அனுப்பி வைக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில், ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் பிரவீன் குமார், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறையின் இயக்குனர் ஆர்.பிருந்தா தேவி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குனர் அருண் பஜாஜ் மற்றும் அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓமன் நாட்டிற்கான துணைத் தூதர் பிரவீன் குமார், "மிகப் பெரிய இறக்குமதி நாடான ஓமனுக்கு வேளாண் மற்றும் இதர உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறனை இந்தியா கொண்டிருக்கிறது. அதே சமயம், ஏற்றுமதி செய்யும் நாடு, தேவைப்படும் தரத்தை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆர்.பிருந்தா தேவி பேசும்போது, "வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்காக பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். தரமான பொருட்களை வழங்கும் ஏற்றுமதியாளர்களுக்கு மாநில அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன்" என்றார்.

இந்த நிகழ்வின் போது ஓமனின் தலைநகரான மஸ்கட் நகருக்கு தமிழ்நாட்டில் இருந்து புவிசார் குறியீடு பெற்ற சுமார் 500 கிலோ மதுரை மல்லி மற்றும் பாரம்பரிய மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்