இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாதது - கே.எஸ்.அழகிரி
|பல்வேறு மத, மொழி, கலாசாரம் உள்ள இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாதது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கம்
தமிழ்நாடு காங்கிரஸ் வக்கீல் பிரிவு சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில், 'அரசமைப்புச் சட்டம் எதிர்நோக்கும் சவால்கள்' என்ற தலைப்பில் அரசமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் கே.சந்திரமோகன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் மூத்த வக்கீல் வி.மாசிலாமணி கருத்துரை வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு நிறைவுரை வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர்கள் உ.பலராமன், ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, வக்கீல் அணுகுண்டு ஆறுமுகம், வக்கீல் பிரிவு துணை தலைவர் எஸ்.கே.நவாஸ் மற்றும் வக்கீல் வி.அருணாச்சலம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புத்தக வெளியீடு
நிகழ்ச்சியில், கட்சியின் மாநில செயலாளர் அசன் சேக் மொழிபெயர்த்த, 'பொது சிவில் சட்டம் அவசியமா?' என்ற புத்தகத்தை கே.எஸ்.அழகிரி வெளியிட மூத்த வக்கீல் ஜி.மாசிலாமணி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் எந்த மதமாக, எந்த கலாசாரமாக, எவ்வகை பிரிவு மக்களாக இருந்தாலும் அனைவரும் சம உரிமையோடு வாழலாம் என்பது தான் அரசியல் சட்டத்தின் அடிப்படை கருத்து. ஆனால், மத்திய உள்துறை மந்திரி பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்கிறார். பொது சிவில் சட்டம் இந்திய சமுதாயத்துக்கு எவ்வாறு ஒத்து வரும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பகவத் கீதை எழுதப்பட்டது. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தரின் தம்மபதம் எழுதப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பைபிள் எழுதப்பட்டது. ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்பு குரான் எழுதப்பட்டது. இந்தியாவில் இவைகளை பின்பற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டத்தை எப்படி கொண்டு வர முடியும்.
நடைமுறை சாத்தியமில்லாதது
ராணுவ ஆட்சியை கொண்டு வந்து ஒரு சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று சொன்னால் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எல்லோரும் இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவில் பல மதங்கள், பல மொழிகள், பல கலாசாரங்கள் இருக்கின்றன. அனைவருக்குமான உரிமையை இந்திய அரசியல் சட்டம் கொடுக்கிறது. அதனால் பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தில் படுகாயம் அடைந்த போலீஸ் அதிகாரி அனுசுயாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தலைவரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். அதில், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் வேறுவிதமான நடவடிக்கையை மேற்கொள்வோம்.
எடப்பாடி பழனிசாமி முதலில் அவரோடு இருக்கிற கட்சிகளை காப்பாற்ற வேண்டும். அவர் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியை அழைத்தால் யார் போவார்கள். அதற்கான வாய்ப்புகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.