சென்னை
பிளஸ்-2 தேர்வில் மாநகராட்சி பள்ளி அளவில் முதல் இடம் பிடித்த மாணவி காயத்ரி, எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தார்
|பிளஸ்-2 தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி காயத்ரி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நீலகண்டன்-லட்சுமி தம்பதியரின் மகள் காயத்ரி. இவர், சென்னை பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்தார். சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 600-க்கு 592 மதிப்பெண்கள் வாங்கி மாநகராட்சி பள்ளி அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
அவருக்கு சென்னை எத்திராஜ் கல்லூரியில் 'ஸ்காலர்ஷிப்' வசதியுடன் பி.காம். படிப்பதற்கு அட்மிஷன் கிடைத்துள்ளது. இந்த கல்லூரியில் இந்த கல்வி ஆண்டின் முதல் சேர்க்கையாக மாணவி காயத்ரிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 'அட்மிஷன்' சான்றிதழை கல்லூரியின் நிர்வாக குழு தலைவர் முரளிதரன் வழங்கி வாழ்த்து கூறினார். அப்போது கல்லூரியின் முதல்வர் உமா கவுரி மற்றும் பேராசிரியைகள் உடன் இருந்தனர்.
எத்திராஜ் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்த மகிழ்ச்சியில் மாணவி காயத்ரி கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வு முடிவு வந்த அன்றைய தினமே சென்னையில் உள்ள மிகப்பெரிய கல்லூரியான எத்திராஜ் கல்லூரியில் இருந்து நிர்வாக குழு தலைவர் முரளிதரன் என்னை செல்போனில் அழைத்து வாழ்த்து சொன்னார். எனது பெற்றோரிடம் எங்களது கல்லூரியில் உங்களது மகள் என்ன படிக்க விரும்புகிறாரோ? அதை நாங்கள் முதல் அட்மிஷனாக தந்து விடுகிறோம் என்று கூறினார். இது எங்களுக்கு எதிர்பாராத ஒரு மகிழ்ச்சியாக இருந்தது.ஆனால் அவரிடம் கல்லூரியில் சேருவதற்கு பணம் அதிகம் தேவைப்படுமே. எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்று என் பெற்றோர் கூறினார்கள். அதற்கு முரளிதரன், 'ஸ்காலர்ஷிப்' வசதியுடன் உங்களது மகளுக்கு அட்மிஷன் தருகிறோம் என்று கூறினார். அதன்படி கல்லூரியில் முதல் அட்மிஷனாக எனக்கு அதற்குரிய சான்றிதழை தந்தார்கள். நான் சி.ஏ. படிக்க விரும்பியுள்ளேன். அதற்காக பி.காம் படிப்பை தேர்வு செய்துள்ளேன். ஊக்கப்படுத்தி கல்லூரியில் சேர அனுமதித்த நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் படிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.