எண்ணூர் அருகே தொழிற்சாலையில் வாயுக்கசிவு: பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்
|எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கு மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயுக்கசிவால் பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வெளியேறினர்.
கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதாகவும், குழாயில் ஏற்பட்ட சேதம் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.