கன்னியாகுமரி
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கருட தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
|சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி கருட தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம்:
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி கருட தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி திருவிழா
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்திஇசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
கருட தரிசனம்
இந்தநிைலயில், 5-ம் திருவிழாவான நேற்று அதிகாலையில் கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரர், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன், கருட வாகனத்தில் பெருமாள் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுடன் வேளிமலை முருகன், மருங்கூர் சுப்பிரமணிய சாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்தனர். பிறகு வீரமார்த்தாண்ட கோவில் முன் மேற்கு நோக்கி உமா மகேஸ்வரர், பெருமாள், அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூன்று பேரும் நின்றனர். அப்போது அத்திரி முனிவரும், அனுசுயா தேவியும் வானத்தில் கருட வடிவில் வந்து தாணுமாலய சாமியை வணங்கினர். இந்த கருட தரிசனம் நிகழ்ச்சியை காண திரண்டிருந்த திரளான பக்தர்கள் பார்த்து வணங்கினர்.
தேர்திருவிழா
விழாவில் வருகிற 5-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.