திண்டுக்கல்
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
|திண்டுக்கல்லில் காந்தி சிலைக்கு கலெக்டர் பூங்கொடி மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சிலைக்கு மாலை அணிவிப்பு
நாடு முழுவதும் நேற்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு, கலெக்டர் பூங்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அண்ணா வணிக வளாகத்தில் கதர் அங்காடியில், கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடந்த கதர் சிறப்பு விற்பனையையும் கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஆணையர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் சுப்பிரமணி, மண்டல தலைவர் ஜான்பீட்டர், கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கம் சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த விழாவில், மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில செயலாளர் ஜெயசீலன், வாசகர் வட்ட செயலாளர் சக்திவேல், நூலகர் சுகுமார், கவிஞர் சுரதா, பேராசிரியர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர்
இதேபோல் வேடசந்தூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி, அவர்களது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். மேற்கு வட்டார தலைவர் பகவான், நகர தலைவர் ஜாபர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் கலந்து கொண்டார். இதில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, நகர துணைத்தலைவர் கன்னியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நத்தம் மூன்றுலாந்தர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர் பழனியப்பன் தலைமையில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது. அப்போது அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.