ராணிப்பேட்டை
கடை, குடோன்களுக்கான குப்பை வரியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்
|சோளிங்கரில் உள்ள நகராட்சி கடைகள் மற்றும் குடோன்களுக்கான குப்பை வரியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகராட்சி கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பழனி, நகராட்சி ஆணையர் பிரித்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து பேசப்பட்டது.
அப்போது 8-வது வார்டு உறுப்பினர் கோபால் பேசும்போது நகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் உள்ளதால், கழிவுநீர் கால்வாயை தூர்வாரி, கொசு மருந்து தெளிக்க வேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் பயன்படும் வகையில் இருக்கைகள் அமைக்க வேண்டும். நகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.
மறுசீரமைப்பு
நகராட்சிக்கு உட்பட்ட கடைகள், குடோன்களுக்கான வரியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். நகராட்சி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.
17-வது வார்டு உறுப்பினர் அன்பரசு பேசுகையில் 17-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாயை முறையாக அமைத்து கழிவுநீர் வெளியேற்ற வழி வெகை செய்ய வேண்டும். இங்குள்ள அனைத்து தெருக்களிலும் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்றார்.
24-வது வார்டு உறுப்பினர் அருண்ஆதி பேசுகையில் பல ஆண்டு கோரிக்கையான ஸ்ரீராம் நகருக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்றார்.
21-வது வார்டு உறுப்பினர் ராதா வெங்கடேசன் பேசும்போது காமராஜர் நகர் பகுதியில் குடிநீர் பைப் லைன் அமைக்க பள்ளம் எடுக்கப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளது. காமராஜர் நகர் மெயின் தெருவில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பொன்னையாற்று குடிநீர்
7-வது வார்டு பகுதியில் உள்ள பெரிய தெரு, திருவள்ளூர் தெரு பகுதிகளில் உள்ள கிணற்றில் புதிய மின் மோட்டார் அமைக்க வேண்டும், குளக்கரை பகுதியில் புதிய பைப் லைன் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
16-வது வார்டு கீழ்யாண்ட மோட்டூர் பகுதிக்கு பொன்னை ஆற்று குடிநீர் வழங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பொன்னை ஆற்று குடிநீர் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு ஆற்று குடிநீர் வழங்க வேண்டும். 23-வது வார்டு பகுதியில் மின்விளக்கு, புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். மண் சாலைகளை சிமெண்டு சாலைகளாக மற்ற வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தெரிவித்தார்.