< Back
மாநில செய்திகள்
புதுஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

புதுஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்

தினத்தந்தி
|
30 Sept 2023 2:51 AM IST

தஞ்சை புதுஆற்றங்கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை புதுஆற்றங்கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்..

புதுஆறு

தஞ்சை வழியாக செல்லும் ஆறுகளில் புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய். இந்த ஆறு தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பிரிந்து தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.29 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த ஆறின் மூலம் 694 ஏரி, குளங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த புது ஆற்றை தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். இந்த நிலையில் தஞ்சையில் உள்ள புதுஆற்றின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குப்பைகள்

குறிப்பாக தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் செல்லும் புதுஆற்றின் கரையோரத்தில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி பாய்ந்தோடும் போது குப்பைகள் தண்ணீரில் அடித்து செல்லப்படுகின்றன. மேலும், ஒரு சிலர் இறைச்சி கழிவுகளை மூட்டைகளாக கட்டி ஆற்றுக்குள் வீசி செல்கின்றனர்.

இதனால் ஆற்று நீர் மாசடைகிறது. அதுமட்டுமின்றி குப்பைகள் ஆற்றுக்குள் இருக்கும் பாலங்களின் தூண்களில் சிக்கிக்கொண்டு நீரின் வேகத்துக்கு தடை போடுகின்றன. இவற்றால் விளைநிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

சுகாதார சீர்கேடு

அதுமட்டுமின்றி ஆற்றின் கரையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சிலர் தீயிட்டு எரித்து செல்கின்றனர். இதனால் வெளியேறும் புகையினால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், புது ஆற்றங்கரையோரத்தில் தேவையான இடங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்