விருதுநகர்
உப்போடை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்
|உப்போடை பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் உள்ள உப்போடையில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, நீரின் தன்மையும் மாறும் நிலை உள்ளது.. இந்த உப்போடை கரைப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த உப்போடை இப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது. மழைக்காலத்தில் சிவகாசி பகுதியில் இருந்து வரும் நீரானது இந்த உப்போடை வழியாக அ.ராமலிங்கபுரம் கண்மாய், வேண்டாம்குளம் கண்மாய் வழியாக இருக்கன்குடி அணைக்கு செல்கிறது. மேலும் இந்த கழிவுகளால் அப்பகுதியில் நீரின் தன்மை மாறுவதோடு மாசடைகிறது. இதில் வெங்கடாசலபுரம் கிராம பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த உப்போடையில் சேமித்து வைக்கப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஆலை கழிவுகள், கோழி போன்ற இறைச்சி கழிவுகளும் அங்கு கொட்டப்படுகின்றன. மேலும் நீர்வரத்து பகுதியான உப்போடை பகுதியை குப்பை கிடங்காக பயன்படுத்துவதால் அப்பகுதியில் உள்ள நீரின் தன்மை மாறுபடுவதோடு பொதுமக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இங்குள்ள குப்பைகளை எரிப்பதால் சுவாச பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் குப்பைகளை வேறு இடத்தில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.