மயிலாடுதுறை
பழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்
|சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழங்காவிரி வாய்க்கால்
மயிலாடுதுறை நகரில் கும்பகோணம் பிரதான சாலையில் நாள்தோறும் கார், பஸ், வேன், கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இதனால் மேற்கண்ட சாலையில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மயிலாடுதுறை செங்கழுநீர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது.
இந்த பஸ் நிறுத்தத்தையொட்டி செல்லும் பழங்காவிரி வாய்க்காலில் சிறு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக கீழ ஒத்தச்சரகு தெரு, எடத்தெரு, வடக்குசாலிய தெரு, பெரிய சாலிய தெரு, ரெயில் நிலையம், கூறைநாடு வழியாக மயிலாடுதுறை டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும்.
சுகாதார சீர்கேடு
இந்த நிலையில் இந்த சிறு பாலத்தின் இருபுறமும் பழங்காவிரியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வாய்க்கால் இருப்பதற்கான தடமே தெரியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், அங்கு மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள், கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்தபடியே செல்லும் அவலநிலை உள்ளது.
பல நாட்களாக அங்கு குப்பைகள் கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கொசு அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் பழங்காவிரி வாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என்றும், அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளை சேர்ந்தவர்கள் அங்கு குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுக்க நிரந்தரமாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.