திருவண்ணாமலை
குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்
|பேரயாம்பட்டில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேரயாம்பட்டில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் குப்பைகள்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பேரையாம்பட்டு. இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, கிழக்கு வீதி, பழையனூர் சாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைகள் சரியான முறையில் சேகரித்து அதனை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்காமல் குடியிருப்பின் மையப்பகுதியில் குப்பைகளை குவியல், குவியலாக கொட்டப்பட்டு, அதனை தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
கிராமப்புறங்களை தூய்மைப்படுத்துவதற்கு ஏதுவாக சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து அதனை திடக்கழிவு மேலாண்மை மூலம் சில பகுதிகளில் உரமாகவும் தயாரிக்கப்பட்டு வருகின்றனர்.
நடவடிக்கை இல்லை
மேலும் குப்பைகளை சேகரித்துக் கொண்டு செல்வதற்கு பேட்டரி வாகனமும், தள்ளு வண்டியும் வழங்கப்பட்டு வருகிறது. குப்பை சேகரிப்பதற்கு பல்வேறு வாகனங்கள் கொடுத்தும் இப்பகுதிகளில் அதிகளவில் குப்பைகள் தெருவின் மையப் பகுதிகளில் மட்டுமல்லாமல் ஆங்காங்கே குவியல், குவியிலாக கொட்டப்பட்டு வருகிறது.
குப்பைகளை தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டு, அதில் தீ வைக்கப்படுவதால் அதில் இருந்து புகை அதிகளவில் வெளியேறி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மூச்சுத் திணறலால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனங்கள் மூலம் கொண்டு சென்று தனித்தனியாக தரம் பிரிக்கப்பட்டு அதனை முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.