விழுப்புரம்
கோலியனூர் ஒன்றியத்தில் பயன்பாடின்றி நிற்கும் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள்
|கோலியனூர் ஒன்றியத்தில் குப்பை சேகரிப்பதற்கான பேட்டரி வாகனங்கள் பயன்பாடின்றி நிற்கின்றன.
கோலியனூர் ஒன்றியம்
கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை அவ்வப்போது தூய்மைப்பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர்.
இவற்றில் வீடுகள்தோறும் தூய்மைப்பணியாளர்கள் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக வாங்கி சேகரிக்கின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மக்காத குப்பைகள், வெளிமாவட்டங்களில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
பேட்டரி வாகனங்கள்
இவ்வாறு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து அவற்றை சேகரிக்க ஏதுவாக 3 சக்கர தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களால், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணிகள் விரைவாக நடைபெறவில்லை.
இதையடுத்து குப்பைகளை சேகரிக்க ஏதுவாக கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஒரு ஊராட்சிக்கு ஒரு வாகனம் என்ற வீதத்தில் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் வாங்கப்பட்டன.
பயன்பாடின்றி கிடக்கிறது
அந்த வாகனங்கள் சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் அதன் பிறகு முறையாக பராமரிக்காததால் பழுதடைந்தது. அந்த வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் அப்படியே ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே காட்சிப்பொருளாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ள அந்த வாகனங்கள் அனைத்தும் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் மக்கிப்போய் வருகிறது.
கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிதாக பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டபோதிலும் ஏற்கனவே வழங்கிய பழைய வாகனங்களின் பழுதை சரிசெய்யாமல் அப்படியே விட்டுவிட்டதால் அந்த வாகனங்கள் வீணாகி வருகிறது.
இந்த வாகனங்களின் பழுதை சரிசெய்து குப்பை சேகரிப்பதற்கான பணிக்கு கூடுதலாக பயன்படுத்த மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். அல்லது இந்த வாகனங்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் தொகையில் வேறு புதிய வாகனங்கள் வாங்கவோ அல்லது ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?