சென்னை
காரில் கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை - சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
|காரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினத்துக்கு கார் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 18.7.2018 அன்று சென்னை காரனோடை சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. காரில் இருந்த கோவை துடியலூரைச் சேர்ந்த ரகுராமன் (வயது 25), வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சரண்குமார் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரகுராமன், சரண்குமார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் மேல்முறையீடு முடிந்த பின்பு கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரை அரசுடமையாக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.