சென்னை
'வாட்ஸ் அப்' மூலம் கஞ்சா விற்றவர் கைது - போலீசார் கண்காணித்து பிடித்தனர்
|‘வாட்ஸ் அப்’ மூலம் கஞ்சா விற்றவரை போலீசார் கண்காணித்து பிடித்தனர்.
சென்னை சூளைமேடு லோகநாதன் தெருவில் வாலிபர் ஒருவர் தினமும் ஸ்கூட்டரில் வந்து கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக அண்ணாநகர் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் குறிப்பிட்ட லோகநாதன் தெருவில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கூட்டரில் அங்கு வந்து கஞ்சா பொட்டலங்களை ஆசாமி ஒருவர் விற்க தொடங்கினார். ஒரு பொட்டலம் 50 ரூபாய் என்று மாறு வேடத்தில் நின்ற போலீசாருக்கும் விலை சொன்னார். உடனே போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது பெயர் யாசர்அராபத் (வயது 36). அதே பகுதியைச்சேர்ந்தவர்தான். அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. 'வாட்ஸ் அப்' மூலம் கஞ்சா கேட்டு அவருக்கு தகவல் வருமாம். அதை அடிப்படையாக வைத்து அவர் ஸ்கூட்டரில் சென்று கஞ்சா வினியோகம் செய்வாராம். அவர் மீது ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. கஞ்சாவை எடைபோட்டு பொட்டலம் போட்டு விற்பதற்காக எடை எந்திரம் ஒன்றும் அவரிடம் இருந்தது. அதையும், ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.