< Back
மாநில செய்திகள்
கஞ்சா போதை படுத்தும் பாடு: சென்னையில் கல்லூரி மாணவர்களை தாக்கிய சிறுவர்கள்
சென்னை
மாநில செய்திகள்

கஞ்சா போதை படுத்தும் பாடு: சென்னையில் கல்லூரி மாணவர்களை தாக்கிய சிறுவர்கள்

தினத்தந்தி
|
30 July 2023 11:25 AM IST

சென்னையில் கஞ்சா போதையில் கல்லூரி மாணவர்களை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி நகைகளை சிறுவர்கள் பறித்து சென்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி தனது நண்பர்களான அதே கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் மற்றும் வேறு கல்லூரிகளில் படிக்கும் 3 மாணவர்களுக்கு மது விருந்து அளித்தார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள அந்த கல்லூரியின் பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே இவர்கள் மது, கஞ்சா போதையில் உற்சாகமாக இருந்தனர்.

அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் இவர்களுடன் கஞ்சா போதையில் ஐக்கியமானது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர்களிடம் இன்னும் கஞ்சா வேண்டும் என்றுக்கேட்டு அடம்பிடித்தனர். அதற்கு கஞ்சா காலியாகிவிட்டது என்று கல்லூரி மாணவர்கள் கூறவே அந்த கும்பல் ஆத்திரமடைந்தது.

கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ரத்த காயம் அடைந்தனர். பின்னர் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி மாணவர்கள் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரத்தை பறித்து சென்றது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

தாக்குதலில் ஈடுபட்டு வழிபறி செய்தது செனாய் நகர், சூளைமேடு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் ஒரு சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வருவதும், இன்னொரு சிறுவன் ஐ.டி.ஐ. படித்து வருவதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா போதைக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவதால் சமூக சீரழிவுகள் பெருகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்