விழுப்புரம்
வீச்சரிவாளுடன் வந்த கஞ்சா வியாபாரிகளை கம்பத்தில் கட்டி வைத்து அடி-உதை
|திருவெண்ணெய்நல்லூர் அருகே வீச்சரிவாளுடன் வந்த கஞ்சா வியாபாரிகளை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலர் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனத்தூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்துவிட்டு சென்றதாக தெரிகிறது. இது குறித்து பொதுமக்கள் சார்பில் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அறிந்த கஞ்சா வியாபாரிகள், போலீசில் ஏன் புகார் அளித்தீர்கள் என கூறி ஆனத்தூரை சேர்ந்த அருள் என்பவரை பிடித்து தாக்க முயன்றனர். இதனால் இந்த 2 கிராமம் இளைஞர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் நேற்று காலை பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த கஞ்சா விற்பனையாளர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆனத்தூரை சேர்ந்த சிலருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தர்ம அடி
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இரவு 7 மணிக்கு கஞ்சா வியாபாரிகளான பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரகுபதி, அம்மாபேட்டையை சேர்ந்த பத்ரி உள்பட 3 பேர் வீச்சரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் ஆனத்தூருக்கு வந்து பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தனர்.
அவர்களை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரானஅருண்குமார் என்கிற கோப்பெருஞ்சிங்கன் (வயது 20) என்பவரை வீச்சரிவாளால் வெட்டினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த 3 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இருப்பினும் அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து பொதுமக்கள், பிடிபட்ட பத்ரி, ரகுபதி ஆகிய 2 பேரையும் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
போலீசார் விசாரணை
இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வெட்டுகாயமடைந்த அருண்குமார் மற்றும் கஞ்சா விற்பனையாளர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.