< Back
மாநில செய்திகள்
வீட்டில் வெடிகுண்டுகள் பதுக்கிய கஞ்சா வியாபாரி: மற்றொரு வியாபாரியை கொல்ல திட்டமிட்டது அம்பலம்
சென்னை
மாநில செய்திகள்

வீட்டில் வெடிகுண்டுகள் பதுக்கிய கஞ்சா வியாபாரி: மற்றொரு வியாபாரியை கொல்ல திட்டமிட்டது அம்பலம்

தினத்தந்தி
|
28 Aug 2022 1:59 PM IST

காஞ்சீபுரத்தில் வீட்டில் வெடிகுண்டுகள் பதுக்கிய கஞ்சா வியாபாரி மற்றொரு கஞ்சா வியாபாரியை கொல்ல திட்டமிட்டது அம்பலம் ஆனது.

காஞ்சீபுரம் மாண்டுகனீஸ்வரர் கோவில் தெருவில் வசிப்பவர் தேவிகா. இவருடைய வீட்டில் காஞ்சீபுரம் அடுத்த குருவி மலை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் (வயது 40) என்பவர் 2-வது மாடியில் வாடகைக்கு தங்கி உள்ளார். இவர், குருவிமலை பகுதியில் பம்பை அடித்தும், காஞ்சீபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியில் ஈடுபட்டும் வருகிறார்.

இந்த நிலையில் இங்கு கஞ்சா இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததன்பேரில், சிவகாஞ்சி போலீசார் தேவிகாவின் 2-வது மாடிக்கு சென்று அங்கு உள்ள சிவசங்கரன் குடியிருக்கும் வீட்டில் ஆய்வு செய்தனர்.

அங்கு இருந்த ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிவசங்கரனின் அறையை தீவிரமாக சோதனை செய்தபோது அங்கு பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கையெறி வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் மூலபொருட்கள் இருப்பது தெரியவந்தது.

போலீசார் கையெறி வெடிகுண்டுகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, சிவசங்கரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவசங்கரனிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி என்பவர் இங்கு தங்கி இருந்து இந்த வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான புகழேந்தி மற்றும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர் குழு ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் 7 பேர் வெடிகுண்டுகளை ஆய்வு செய்ய சென்னை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

வெடிகுண்டுகளை தயாரித்து தொழில் போட்டியில் தனக்கு எதிராக செயல்படும் கஞ்சா வியாபாரி ஒருவரை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்