திண்டுக்கல்
ஆந்திர மாநில கஞ்சா வியாபாரி கைது
|ஆந்திர மாநில கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
வத்தலக்குண்டுவில் பைபாஸ் சாலையில் கடந்த 28-ந்தேதி போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது கஞ்சா கடத்தி வந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா, ரூ.3 லட்சம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களுக்கு ஆந்திரா மாநிலம் அனந்தபுரியை சேர்ந்த வனவேலு (வயது 32) என்பவர் கஞ்சா சப்ளை செய்துள்ளார். இவரை பிடிக்க வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆந்திரா சென்ற தனிப்படையினர், அங்கு பதுங்கி இருந்த வனவேலுவை கைது செய்து வத்தலக்குண்டு கொண்டு வந்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை ரெயிலில் கடத்தி வந்து வத்தலக்குண்டு பகுதியில் இவர் வினியோகம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர், நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.