வேலூர்
கஞ்சா வியாபாரி கைது
|குடியாத்தத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் கஞ்சா வியாபாரிகளை போலீசார் கண்காணித்து வந்தனர். அதில் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குடியாத்தம் நெல்லூர்பேட்டை, தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த நாகு என்கிற நாகராஜ் (வயது 29) என்பவர் 10 பேரை கூட்டாளிகளாக வைத்துக்கொண்டு கஞ்சா விற்பது தெரியவந்தது. இதனையடுத்து நாகராஜனின் கூட்டாளிகள் 8 பேரை கைது செய்தனர். நாகராஜ் தொடர்ந்து கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது. கஞ்சா விற்றதாக இவர் மீது 5 வழக்குகள் உள்ளது. 3 முறை சிறை சென்றுள்ளார். இதில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சுரேஷ்குமார், பிரபு, கணேசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர், குடியாத்தம் பெரும்பாடு ரோடு சேங்கண்டியம்மன் கோவில் அருகே கஞ்சா பொட்டலத்துடன் இருந்த நாகராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் நாகராஜ் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் அடுத்த காலவபல்லி கிராமத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.