கஞ்சா விற்பனை ஒழிப்பு: 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் - டிஜிபி சைலேந்திரபாபு
|தமிழகத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 2 ஆயிரம் பேருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துவந்தது கவலை அளித்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதற்கேற்ப, சில இடங்களில் கல்லூரி விடுதிகளிலும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது சூழலின் தன்மையை விளக்கும் வகையில் அமைந்தது.
இதுபோன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களால் பல்வேறு இடங்களில் அடிதடி போன்ற குற்றச் செயல்களும் அதிகரிக்க தொடங்கியதால், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் தடுக்க, தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க, காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.
அதன்படி, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடக்க காவல் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 2 ஆயிரம் பேருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.