கஞ்சா வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
|கஞ்சா பதுக்கியதாக பதிவான வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அவரை கடந்த 4-ந்தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர். பின்னர் சவுக்குசங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து சவுக்கு சங்கர் தங்கி இருந்த விடுதி அறை மற்றும் அவர் வந்த காரில் போலீசார் சோதனை செய்தனர். அதில், 409 கிராம் கஞ்சா இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சவுக்கு சங்கர், அவருடைய உதவியாளர் ராம்பிரபு, கார் டிரைவர் ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீது தேனி மாவட்டம் பழனிசெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதனையடுத்து சவுக்கு சங்கர் கடந்த 8-ம் தேதி மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது 2 முறை விசாரணை நடந்துள்ளது.
இந்த நிலையில், கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை சவுக்கு சங்கர் இன்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.