மயிலாடுதுறை
வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
|பள்ளி அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட வாலிபரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சீர்காழி:
பள்ளி அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட வாலிபரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பள்ளி அருகே மது அருந்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் ஜெயப்பிரகாஷ்(வயது 23). ரகு மகன் கதிர். அதே பகுதி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் பாலமுருகன்(21). இவர்கள் 3 பேரும் கடந்த 31-ந் தேதி கொண்டல் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி அருகில் மது அருந்தி கொண்டிருந்தனர்.
கைகலப்பு
அப்போது அந்த வழியாக வந்த வள்ளுவக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த பாலச்சந்தர் மகன் பூபாலன்(29) என்பவர், ஏன் பள்ளி அருகில் மது அருந்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது.
பெட்ரோல் குண்டுகள் வீச்சு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயப்பிரகாஷ், பாலமுருகன், கதிர் ஆகிய 3 பேரும் பூபாலன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் வீட்டின் முன்புறம் இருந்த முருங்கை மரமும், வீட்டின் சுவரும் லேசான சேதம் அடைந்தது.
2 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு
இதுகுறித்து பூபாலன் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய ஜெயப்பிரகாஷ், பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான கதிரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பள்ளி அருகே மது குடித்ததை தட்டிக்கேட்ட வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.