அரியலூர்
அரியலூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அரியலூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தொடர் குற்றச்செயல்
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, பொன்பரப்பி, அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த நித்தியானந்தத்தின் மகன் தமிழ்பாரதி (வயது 21). இவர் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் உண்டியல்களை உடைத்து திருடி வந்தார். இதுதவிர பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டிலும், வழிப்பறியிலும் ஈடுபட்டு வந்தார். தமிழ்பாரதி ஒரு இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றதை பற்றி அதன் உரிமையாளரிடம் சொன்னதற்காக மத்துமடக்கியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதத்தில் காரை ஏற்றி கொல்ல முயன்றதில் அவர் சுதாரித்து தப்பியுள்ளார்.
இது தொடர்பாக அரியலூர் போலீஸ் நிலையத்தில் தமிழ்பாரதி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்பாரதி கடந்த மாதம் 27-ந்தேதி சின்னவளையம் காளியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து சாமி சிலையில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளார். அவர் கடந்த மாதம் 29-ந்தேதி ஜெயங்கொண்டத்தில் கத்தியை காட்டி வழிப்பறி செய்துள்ளார். இவை தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தமிழ்பாரதியை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்த நிலையில் தமிழ்பாரதி வெளியே வந்தால் மேலும் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், அவரை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று தமிழ்பாரதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் இருந்து தமிழ்பாரதியை நேற்று போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலினை சிறை அதிகாரியிடம் போலீசார் வழங்கினர்.