அரியலூர்
கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|அரியலூரில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம், கண்டிராதீர்த்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் அர்ஜூன்ராஜ் (வயது 34). இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த மாதம் 9-ந்தேதி ஒரு கொலை வழக்கில் ஈடுபட்டதால், திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில் இவர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர் என தெரியவந்தது.
எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிடம் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வலியுறுத்தினார். அதன்படி போலீஸ் சூப்பிரண்டின் மேல் பரிந்துரையை ஏற்று அர்ஜூன்ராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணை நேற்று திருச்சி மத்திய சிறை உயர் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.