திருநெல்வேலி
4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|கொலை முயற்சி வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலைய பகுதியில் அடிதடி, கொலைமுயற்சியில் ஈடுபட்டதாக சீவலப்பேரியை சேர்ந்த கருப்பசாமி (வயது 32), கீழநத்தம் பகுதியை சேர்ந்த சகாயராஜ் (25) ஆகியோரும், சேரன்மாதேவி பகுதியில் அடிதடி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கீழகூனியூரை சேர்ந்த வீரமணிகண்டன் (23) என்பவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் வீரவநல்லூர் பகுதியில் அடிதடி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஈரோடு மாவட்டம் ஜெகநாதபுரம் சூரப்பட்டியை சேர்ந்த வேல்முருகன் மகன் ராக்கி சிவா (28) கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர், வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஷ் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் நேற்று சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.