பெரம்பலூர்
கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தத்தை சேர்ந்தவர் கமலஹாசன் (வயது 35). இவா் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில், அவரது மனைவி மஞ்சுளாவுடன் வசித்து வந்தார். மேலும் விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி இரவு வேலை முடிந்து சிறுவாச்சூரில் இருந்து வீட்டிற்கு அவர் நடந்து சென்றார். அப்போது லிப்ட் கேட்ட அவரை, அந்த வழியாக மது போதையில் வந்த புதுநடுவலூர் காலனி தெருவை சேர்ந்த மனோஜ்குமார்(24), கார்த்திக் (27) ஆகியோர் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். அப்போது மேலும் மது குடிப்பதற்கு அவர்கள் பணம் கேட்டபோது, கமலஹாசன் பணம் தர மறுத்துள்ளார். பின்னர் அவர்கள் அவரது மனைவி மஞ்சுளாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினர். மஞ்சுளாவும் பணம் கொடுக்காததால் அவர்கள் கமலஹாசனை கொலை செய்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமார், கார்த்திக்கை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை கலெக்டர் கற்பகம் ஏற்று, குண்டர் சட்டத்தில் மனோஜ்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவு ஆணையின் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் பெரம்பலூர் போலீசார் வழங்கினர்.