< Back
மாநில செய்திகள்
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
மாநில செய்திகள்

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
24 Sept 2023 12:47 AM IST

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலம் அருகே கடந்த ஜூலை மாதம் ஒரு பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, முதலியார்சத்திரத்தை சேர்ந்த நித்தினை(22) கைது செய்து, சிறையில் அடைத்தனர். விமானநிலையம் வயர்லெஸ்ரோடு பொதுகழிப்பிடம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்ற காமராஜ்நகரை சேர்ந்த மணிகண்டனை (25) போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில் நித்தின் மீது செல்போன் பறித்தல் உள்பட 10 வழக்குகளும், மணிகண்டன் மீது கஞ்சா விற்றது உள்பட 9 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இதையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.

கத்தியை காட்டி பணம் பறிப்பு

*திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகர் எம்.ஜி.ஆர். மன்றம் அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து எடமலைபட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு பணத்தை பறித்ததாக செந்தில் முருகன், செந்தில் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது

*திருச்சி மதுரைரோடு, ஜீவாநகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த முகம்மதுரபீக்கின் மகன் அப்துல்ரஷீத்(23). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று முன்தினம் இரவு மதுரை ரோட்டில் உள்ள ஒரு பள்ளிவாசல் அருகே சென்றபோது, அவரது நண்பர் ஜமீர் என்பவரை சாதிக்பாஷா(20), சச்சின், ரகுநாதன் ஆகியோர் திட்டி, தாக்கினர். இது குறித்து அப்துல்ரஷீத் கேட்டபோது, போதை மாத்திரைகள் வாங்கி தருவதாக ரூ.1000 பெற்று, மாத்திரைகள் வாங்கி தராததால் தாக்கியதாக கூறியுள்ளனர். மேலும் தாக்குதலை தடுத்த அப்துல்ரஷீத்தை சாதிக்பாஷா கத்தியால் தாக்க முயன்றபோது, அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாதிக்பாஷாவை கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.

போதை மாத்திரை விற்றவர் சிக்கினார்

*திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் நேற்று பழைய குட்செட் ரோடு பகுதியில் ரோந்து சென்றபோது ரெயில்வே மைதானத்தில் சந்தேகப்படும்படி நின்ற நத்தர்ஷா பள்ளிவாசல் ஜலால் குதிரி தெருவை சேர்ந்த ஜமீர் பாஷாவை(19)பிடித்து விசாரித்தனர். இதில் அவர் போதை மாத்திரைகளையும், அதற்கு பயன்படுத்தும் ஊசிகளையும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, போதை மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

*திருச்சி துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி சரண்யாதேவி(36). இவர் தனது மாமியார் மற்றும் நாத்தனார் சேர்ந்து தன்னிடம் 11 வகையான சீர்வரிசை பொருட்கள் மற்றும் அரை பவுன் தங்க மோதிரம் வரதட்சணையாக வாங்கி வரக்கூறி கொடுமைப்படுத்தியதாகவும், தனது கணவர் உள்பட 3 பேரும் சேர்ந்து தனக்கு குழந்தை இல்லை என்று கூறி அடித்து கொடுமைப்படுத்தி தனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் புகார் கொடுத்தார். அதன்பேரில் 4 பேர் மீது கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்