அரியலூர்
ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை முயற்சி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பஷீரின் மகன் பக்ருதீன் (வயது 22). பிரபல ரவுடியான இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பக்ருதீன் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார்.
மேலும் அவர் கடந்த 2-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று 2 இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்ததோடு மட்டுமின்றி, அந்த குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியும், பெண்ணின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்யவும் முயன்றுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பக்ருதீனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
ஏற்கனவே பக்ருதீன் மீது போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் பக்ருதீன் சிறையில் இருந்து வெளியே வந்தால் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார் என்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அவரின் பரிந்துரையை ஏற்று பக்ருதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து பக்ருதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்தற்கான உத்தரவின் நகலை ஜெயங்கொண்டம் போலீசார் சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினர்.