< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் மோசடி வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு சிம் கார்டு கடத்திய கும்பல் கைது
மாநில செய்திகள்

ஆன்லைன் மோசடி வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு சிம் கார்டு கடத்திய கும்பல் கைது

தினத்தந்தி
|
20 Jun 2024 6:40 AM IST

ஆன்லைன் மோசடி செய்யும் நபர்களுக்காக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு சிம் கார்டுகளை கடத்திச் சென்று விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் கடந்த 16-ந்தேதி மலேசியா செல்ல இருந்த லீ டிக் இயென் என்ற நபரை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி 22 சிம் கார்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் மூலம் பண மோசடி வேலைகளை செய்யும் நபர்களுக்காக சென்னையில் இருந்து அந்த நபர் சிம் கார்டுகளை வாங்கிச் சென்றது தெரியவந்தது.

மேலும் அந்த நபர் சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்களை நடத்தி பல்வேறு நபர்களை ஏஜெண்டுகளாக சேர்த்துள்ளார் எனவும், சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளை வாங்கிச் சென்று வெளிநாடுகளில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பலிடம் விற்பனை செய்துள்ளார் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நபர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 550 சிம் கார்டுகள், 2 லேப்டாப்புகள், 33 வங்கிக் கணக்குகள், 20 ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆன்லைன் மோசடி கும்பலுக்கு சிம் கார்டுகளை வாங்கி அனுப்பும் நபர்கள் யார்? தமிழகத்தில் இவர்களுக்கு எத்தனை பேர் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர்? என்பது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்