ராணிப்பேட்டை
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்
|அரக்கோணத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
அரக்கோணத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சிலைகள் அனைத்தும் மேள தாளங்கள் முழங்க எஸ்.ஆர்.கேட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டன. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் சுதாகர் வரவேற்றார். பா.ஜ.க. மாநில ஓ.பி.சி. பிரிவின் முன்னாள் பொது செயலாளர் பாபாஸ் பாபு, முன்னாள் அரசு வழக்கறிஞர் தியாகராஜன், பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஆகியோர் காவி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் பழனி பேட்டை, பஜார், பழைய பஸ் நிலையம், சுவால்பேட்டை, ஹவுசிங் போர்டு வழியாக சென்று அண்ணா நகரை அடைந்தது. அங்கு ஒன்றன் பின் ஒன்றாக சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, தாசில்தார் பழனிராஜன், இன்ஸ்பெக்டர்கள் முனிசேகர், கமலக்கண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.